இணைந்த கைகள்!

இணைந்த கைகள்!
Published on

அகமதாபாத்தில் ஓர் ஆர்.எஸ்.எஸ் முகாமில் அந்த இளைஞர்கள் இருவரும் முதல்முதலாக சந்தித்துக்கொண்டார்கள்.

ஒருவர் மிகவும்  பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் வசதியான தொழிலதிபர் குடும்பம்.  பின்புலத்தால்  பெரும்வேறுபாடு கொண்டவர்களை இணைத்தது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை.  காலங்கள் கடந்தன.  ஒருவர்  இமய மலைப்பக்கம் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. இன்னொருவர் கல்லூரிக்குச் சென்று படித்தார். பின் பங்கு வர்த்தகம், பிளாஸ்டிக் தொழில் என்று இறங்கினார்.

நண்பர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டது 1980களின் நடுவில். இமயமலைக்குப் போயிருந்தவர் பாஜகவில்  மாநிலப்பொதுச்செயலாளர். நண்பரையும் கட்சிக்குள் இழுத்தார்.  இருபத்தி ஐந்து ஆண்டுகள்! இன்று இரு நண்பர்களும் இந்தியாவை ஆள்கிறார்கள்.  மோடி, அமித் ஷா இருவரின் கதை சுவாரசியமானது.  மோடி தன்னுடைய ஆளுமையால் பெரும் தலைவராக வளர்ந்தார் என்றால் அவருக்குப் பின்னால் இருந்து உழைத்தவர் அமித் ஷா.

இளம் தொழிலதிபராக இருந்த  அமித் ஷாவை அப்போதைய குஜராத் பாஜக தலைவர் ஷங்கர்

சிங் வகேலாவிடம் மோடி அறிமுகப்படுத்தி கட்சியில் பணிகள் தருமாறு கேட்டுக்கொண்டார்.

 91-ல் அத்வானி காந்திநகரில் போட்டியிட்ட போது ஒரு இடத்தில் கூட நீங்கள் பொதுக்கூட்டம் பேசவேண்டாம். உங்கள் வெற்றியை நான் பெற்றுத்தருகிறேன். நீங்கள் பிற பணிகளைக் கவனியுங்கள் என்று மோடியின் நண்பர் அமித் ஷா சொன்னார்.  அத்வானியின் தேர்தல்வேலைகளை அவர்தான் கவனித்தார்.

1997-ல் அவருக்கு குஜராத்தில் ஒரு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வாங்கித் தந்தார் மோடி. அதில் வென்றவர் தொடர்ந்து நான்கு முறை அத்தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

இதற்கிடையில் பாஜக  குஜராத்தில் ஆட்சிக்கு வந்தது.  முதல்வராக கேசுபாய் படேல் வந்தார். அவரிடம் பேசி குஜராத்  மாநில நிதி நிறுவனத்துக்கு அமித் ஷாவை தலைவர் ஆக்கினார் மோடி.  பின்னர் மோடிக்கு குஜராத்தில் உட்கட்சி எதிர்ப்பு. அவரை குஜராத்தில்  இருக்கவிடாமல் டெல்லிக்கு விரட்டிவிட்டார்கள். அவரது மனமோ குஜராத்தில் இருந்தது. 2001-ல் நடந்த குஜராத் பூகம்பத்தை அடுத்து படேலுக்கு கட்சிக்குள் எதிர்ப்பலை. அதை ஊதிவிட்டவர் அமித் ஷா. படேலுக்குப் பதிலாக மோடியைக் கொண்டுவருவது திட்டம். மோடி குஜராத்துக்கு முதல்வராகத் திரும்பினார். நண்பரை முதல்வராகப் பார்த்ததில் மகிழ்ந்துபோனார் அமித் ஷா.  மதக்கலவரத்தை அடுத்து நடந்த 2002 தேர்தலில் மோடியின் பாஜக அமோக  வெற்றி. அமித் ஷாவுக்கு சுமார் பத்து இலாகாக்களை கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்த்தார் மோடி.  நண்பர்களின் அடுத்த இலக்கு புதுடெல்லி.  குஜராத்தில் பத்து ஆண்டுகள் உழைத்த பின்னர் 2012-ல்  ஷோராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில்  அமித் ஷா கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில்

இருந்தார். வெளியே வந்தவரை மீண்டும் குஜராத் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. மோடியின் செல்வாக்கு பாஜகவிலும் இந்திய அளவிலும் உயர்ந்திருந்தது.  மோடி அமித் ஷாவை உத்தரபிரதேசத்துக்கு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்து அனுப்பினார். குஜராத்துக்கு வெளியே அவர் மேற்கொண்ட முதல் பணி அது. இலக்கு உத்தரபிரதேசத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றியைத்தேடித் தருவது.  வாரணாசியில் மோடியைப் போட்டியிட வைத்தார்.

சின்ன சின்னகிராமங்கள் தோறும் மோடியின் பிரச்சார வேன்களை அனுப்பினார். உ.பியின் சமூக அமைப்பை பாஜகவுக்கு ஆதரவாகப் பயன்படுத்தி அதிக அளவில் பிற்படுத்த சமூகத்தினருக்கு சீட்கள் கொடுத்தார்.  பாஜக பெரு வெற்றி பெற்றது. மோடி பிரதமர் ஆனார். பிரதமர் ஆனதும் நண்பர் அமித்ஷாவுக்கு மோடி அளித்த பரிசு பாஜகவின் தலைவர் பதவி!

மோடி- அமித்ஷா ஜோடியின் வெற்றிப் பயணம் தொடந்து கொண்டே இருக்கிறது.

டிசம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com